ஆன்லைனில் சென்னை உயர்நீதிமன்ற வழக்குக்கட்டணம் கட்டுவது எப்படி?ஆன்லைனில் சென்னை உயர்நீதிமன்ற வழக்குக்கட்டணம் கட்டுவது எப்படி...
வழக்கம்போல எப்போதும் நமக்கு பிரச்னைகள் பிரம்மாண்டமாய்த்தான் இருக்கும். ஆனால் அதற்கான தீர்வுகளோ மிகச் சிறியதாய் இருக்கும். இந்த ஆன்லைனில் சென்னை உயர்நீதிமன்ற வழக்குக்கட்டணம் கட்டுவதும் அப்படித்தான். படு சிக்கல் மிகுந்த சமாச்சாரம் போல் தெரியும். அதன் சாராம்சத்தை புரிந்து கொள்ளாமல் செயலில் இறங்குவது வீணே. வழிமுறைகளை தெளிவாக புரிந்துகொண்டு செயலில் இறங்கினால் சுலபம். இல்லையென்றால் இடியாப்பச்சிக்கல்தான், பிரச்னை பிரமாண்டம்தான். இதில் இறங்கும் முன்பு முதலில் நாம் ஒன்றை தெளிவாய்ப் புரிந்துகொள்ள வேண்டும். இது நேரடியாக நம் வங்கி கணக்கில் இருந்து உயர்நீதிமன்ற அல்லது அரசு வங்கி கணக்கில் பணம் கட்டுவதல்ல. ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஸன் என்ற நிறுவனம் நம்மிடம் இருந்து வழக்குக்கட்டணத்தை பெற்று அரசுக்கு செலுத்துகிறது. இதன் வலைத்தளத்தில் (https://www.shcilestamp.com/OnlineStamping/) சென்று, பதிவு (Register) செய் என்றிருக்கும் சுட்டியை உபயோகித்து, முதலில் வழக்கறிஞர் அவருக்கான பயனாளி பெயரையும், கடவுச்சொல்லையும் தெரிவு செய்து ஒரு கணக்கை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இது இலவச கணக்குதான். இதற்கு கட்டணம் ஏதுமில்லை. அதன் பின் அந்த பயனாளி பெயரையும், கடவுச்சொல்லையும் உபயோகித்து அந்த வலைப்பக்கத்தில் உள்ளே நுழைந்தால் அங்கு இடது பக்கம் சில செயல்பாடுகளுக்கான மெனு பட்டியல் இருக்கும். அவற்றில் ‘பணம் செலுத்த’ (make payment) என்றிருக்கும் சுட்டியை தெரிவுசெய்து உள் நுழைந்தால், அங்கு நம் மாநிலத்தை தெரிவு செய்து, கட்ட விரும்பும் தொகையை பூர்த்தி செய்ய வழிகள் இருக்கும். இந்த இடத்தில் நாம் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். இந்த தொகை வழக்குக் கட்டணம் அல்ல. இது நம் வேலட் எனப்படும் பணப் பையில் இருப்பு வைக்க செலுத்தும் தொகையாகும். இது எவ்வளவு வேண்டுமாயும் இருக்கலாம். இது நம் இருப்பிற்கு சென்றபின், அதிலிருந்துதான் நாம் கட்ட விரும்பும் வழக்குக் கட்டணம் எடுத்துக்கொள்ளப்படும். அமேஸான், பே டி எம், இந்தியன் ரயில்வே போன்றவைகள் வழங்குகிறதே வேலட் வசதி, அதுபோல்தான் இதுவும். இதில் முடிந்தவரை குறைவான இருப்பு மட்டுமே வைத்துக்கொள்வது நலம். தேவைக்கேற்ப, அவ்வப்போது ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இப்போது ஒரு தொகையை நம் கணக்கில் இருப்பிற்கு செலுத்திவிட்டால், அது அங்கேயே இருப்பில் இருக்கும். இதை நம் வங்கிக் கணக்கில் இருந்தோ, கடன் அட்டையில் இருந்தோ செலுத்தலாம். அதன்பின் இடதுபுறம் உள்ள மெனு பட்டியலில் முதலில் இருக்கும் ‘அக்கவுண்ட் பேலன்ஸ்’ என்ற குறியை சொடுக்கினால் நாம் செலுத்திய தொகை இருப்பிற்கு வந்துவிட்டதா என்பதை தெரிந்து கொள்ளலாம். அதே போல் நம் கணக்கில் எவ்வளவு மீதம் உள்ளது என்பதை நாம் எப்போது வேண்டுமானாலும் இதில் தெரிந்து கொள்ளலாம். அடுத்ததாக அதே இடதுபுற மெனு பட்டியலில் இருக்கும் ‘இ கோர்ட் ஃபீஸ் ஜெனெரேஸன்’ என்ற சுட்டியை தொட்டு உள் நுழைந்தால் அங்கு நம் மாநிலம் எதுவென தெரிவு செய்யக் கேட்கும். அதை தெரிவு செய்து நுழைந்தால், அங்கும் நம் கணக்கில் மீதமிருக்கும் தொகை தெரியும், அதே பக்கத்தில் நாம் செலுத்த விரும்பும் கட்டணம், வழக்காடியின் பெயர் போன்ற விபரங்களை பூர்த்தி செய்தபின் கீழே உள்ள ‘சப்மிட்’ என்ற பட்டனை தட்டினால், நாம் கட்டிய கட்டணத்திற்கான ரசீது திரையில் விரியும். அதை பிரிண்ட் எடுத்துக் கொள்வதற்கான வசதியும் அதிலேயே இருக்கும். அவ்வளவுதான், வழக்கறிஞர் பெயர், வழக்காடி பெயர் போன்ற விபரங்களுடன் வரும் ரசீதை பிரிண்ட் எடுத்து நம் வழக்கு ஆவணங்களுடன் வைத்து, வழக்கை இ மெய்ல் மூலமோ, இ கோர்ட் மூலமோ தாக்கல் செய்யலாம். பயனாளி பெயரை உருவாக்கும்போது அதில் நம் பெயரோடு, நம் வழக்கறிஞர் பதிவு எண்ணையும் சேர்த்து உருவாக்கிக்கொண்டால், அது ஒரே வழக்கறிஞர் பெயரில் வரும் பெயர்க் குழப்பங்களை தவிர்க்கும். இந்த பயனாளி பெயர்தான் ரசீதிலும் வரும். இந்த வலைப்பக்கத்தில், நாம் இதுவரை வேலட்டில் செலுத்திய பண விபரங்கள், அதிலிருந்து எடுத்து செலுத்தப்பட்ட வழக்கு கட்டணங்கள், எந்தெந்த வழக்குகளுக்கு கட்டினோம் என்ற வழக்கு விபரங்கள், என அத்தனை விபரங்களும் அப்படியே சேமிக்கப்பட்டிருக்கும். எப்போது வேண்டுமானாலும் நம் பயனாளி, கடவுச்சொல் விபரங்களை உபயோகித்து அவற்றை காணலாம்....
வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment