சாத்தான்குளத்தில் இரு உயிர்களை காவு வாங்கிய காவல்துறையும் நீதித்துறையும்

சாத்தான்குளத்தில் இரு உயிர்களை காவு வாங்கிய காவல்துறையும் நீதித்துறையும்!!


ஒருவரை கைது செய்ய காவல்துறையினருக்கு அதிகாரம் உள்ளதா?



ஆம் இருக்கிறது.


ஆனால் எந்த மாதிரியான சூழ்நிலையில் ஒருவரை கைது செய்யலாம் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம், அத்தியாயம் 5 ல் கூறப்பட்டுள்ளது. பிரிவுகள் 41 முதல் 60-A வரையிலான பிரிவுகள் காவல்துறையினருக்கு கைது செய்யும் அதிகாரத்தை வழங்கியுள்ளது.


ஒருவர் கைது செய்வதற்குரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவரை கைது செய்யலாம். அதிலும் குறிப்பாக கொலை, கொள்ளை, கூட்டுக்கொள்ளை, கற்பழிப்பு ஆகிய நான்கு குற்றங்களில் மட்டுமே கட்டாயமாக கைது செய்ய வேண்டும். மற்ற குற்றச் செயல்களை பொறுத்தவரையில் கைது கட்டாயமில்லை. தேவைப்பட்டால் மட்டுமே கைது செய்ய வேண்டும்.


அதென்ன தேவைப்பட்டால் கைது?


இதற்கும் விளக்கம் உள்ளது.


பிரிவு 41-1(2) ன்படி 7 வருடத்திற்கு உட்பட்ட தண்டனைக்குரிய குற்றங்களில் யாரையும் கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதனையும் மீறி கைது செய்தே தீர வேண்டும் என்றால் அதற்கு சில நிபந்தனைகள் இருக்க வேண்டும்.


ஒன்று அந்த நபர் மேலும் குற்றம் செய்வதை தடுப்பதற்காக, இரண்டு அந்த நபர் சாட்சிகளை கலைத்து விடுவார் அல்லது சாட்சியங்களை அழித்து விடுவார் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருக்கும் போது  மூன்று வழக்கின் விசாரணைக்கு வராமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விடுவார் எனும் போது மட்டுமே ஒருவரை கைது செய்ய வேண்டும்.


இந்த பிரிவானது 1.11.2010 ஆம் தேதியிட்ட குற்றவியல் சட்டத் திருத்தத்தின் மூலம் அமலுக்கு வந்துள்ளது.


அடுத்த பிரிவு 41-A


குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு விசாரணை நடத்துவது தொடர்பாக அறிவிப்பு அனுப்ப வேண்டும் என்று கூறும் பிரிவு.


7 வருடத்திற்கு உட்பட்ட தண்டனைக்குரிய குற்றங்களில், புகாரை பெற்றவுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, பின்னர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு இந்த பிரிவின் கீழ் அறிவிப்பு அனுப்ப வேண்டும். அதன்பிறகு விசாரணை நடத்தி நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்.


உச்சநீதிமன்றம் " Johinder Singh Vs state of U. P (AIR-1994-SC1349)


Baghwan Singh Vs State of Punjab (1992-SCJ-361)


2.7.2014 ல் வழங்கப்பட்ட Arnesh Kumar Vs state of bihar


ஆகிய வழக்குகளில் கைது செய்வது எப்படி என்று காவல்துறையினருக்கு உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.


7 வருடத்திற்கு உட்பட்ட தண்டனைக்குரிய குற்றங்களில் யாரையும் கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதனையும் மீறி கைது செய்தே தீர வேண்டும் என்றால் அதற்கான காரணத்தை காவல்துறையினர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையில் கைதுக்கான காரணத்தை கூற வேண்டும். அந்த அறிக்கையே குற்றவியல் நடுவர் படித்து திருப்தி அடைய வேண்டும். கைதுக்குரிய காரணம் ஏற்புடையதாக இருக்கும் பட்சத்திலேயே ரிமாண்ட் செய்ய வேண்டும். இல்லையென்றால் எதிரியை விடுவிக்க வேண்டும். தவறினால் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மற்றும் நீதிபதி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலே கண்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்புகள் வழங்கியுள்ளது.



சாத்தான்குளம் விவகாரத்தில் இறந்து போன அப்பாவிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 188,269,294(பி),353,506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மேற்படி குற்றங்கள் அனைத்துக்குமே அதிகபட்ச தண்டனை 3 முதல் 6 மாதங்கள் மட்டுமே. 506(2) பிடியாணை வேண்டாக் குற்றம் என்று பெரும்பாலானோர் கருதுகிறீர்கள். அது உண்மையல்ல. அபாயகரமான ஆயுதங்களை கையில் தாங்கி கொலை மிரட்டல் விடுத்தால் மட்டுமே 506(2) பொருந்தும். இதற்கு 7 வருடம் வரை தண்டனை உண்டு. மற்றப்படி 6 மாதமே தண்டனை.


ஆக இறந்து போன அப்பாவிகள் மீது பதியப்பட்ட பிரிவுகள் எல்லாமே ஜாமீனில் விடும் குற்றங்களாகும். எனவே இந்த வழக்கில் அவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை.


சட்டவிரோதமாக பொய் வழக்கு பதிவு செய்து அடித்து உதைத்து ரிமாண்ட் செய்ய குற்றவியல் நடுவரிடம் அரைப்பிணமாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.


நடுவராவது சட்டப்படி நடந்து கொண்டாரா?


இல்லை. ரிமாண்டை ஏற்றுக் கொள்ளும் முன் இவர்கள் மீது பதியப்பட்ட குற்றங்கள் அனைத்தும் ஜாமீனில் விடக்கூடியவையே. ஏன் கைது செய்தீர்கள் என்று கேட்டிருக்க வேண்டும். 7 வருடத்திற்கு உட்பட்ட தண்டனைக்குரிய குற்றங்களில் யாரையும் கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி அவர்களை சொந்த ஜாமீனில் விட்டிருக்க வேண்டும். காயங்கள் குறித்து கேட்டறிந்திருக்க வேண்டும். ஆனால் இது எதையும் குற்றவியல் நடுவர் செய்யவில்லை. இதன்மூலம் கொலைக்கு உடந்தையாக நடுவர் செயல்பட்டுள்ளார். நீதித்துறைக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி உள்ளார்.


மொத்தத்தில் காவல்துறையும், நீதித்துறையும் சேர்ந்து படுகொலைகளை செய்துள்ளன.


வழக்கறிஞர் P.M. சுந்தரமூர்த்தி MA.ML


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...