அலட்சியம்?
- 2012 ல் டெல்லி பெண் நிர்பயா, 2019ல் ஐதராபாத் பெண் டாக்டர். இடைப்பட்ட காலத்தில் இன்னும் எத்தனையோ அப்பாவி பெண்கள். பொள்ளாச்சி, சேலம் பலாத்கார கும்பல்கள் வேறு. தினம் தினம் ஏதாவது ஒரு மூலையில் எங்காவது ஒரு இடத்தில் ஒரு பெண் பாலியல் பலவந்தம் செய்யப்படுவதும், கொலை செய்யப்படுவதும் அதிகரித்த வண்ணம் உள்ளது. பிஞ்சு சிறுமிகள் கூட நசுக்கப்படுகின்றனர். தடுக்க முடியாமல் தவிக்கிறது அரசுகள். நிர்பயா பலாத்காரத்திற்கு பின் அப்போதைய காங்கிரஸ் அரசு ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் பாதுகாப்பிற்காக 1000 கோடியை ஒதுக்கி வருகிறது. இன்றளவும் அந்த நிதி ஒதுக்கீடு தொடர்கிறது. ஆனால் மாநில அரசுகள் அலட்சியத்தால் இன்று வரை எந்த மாநிலமும் நிர்பயா நிதியை முழுமையாக பயன்படுத்தவில்லை என்பது வேதனையின் உச்சம். டெல்லிக்கு ரூ.390.90 கோடி ஒதுக்கியதில் 19.41 கோடி மட்டுமே செலவழித்துள்ளது. கர்நாடகாவிற்கு 191.72 கோடி ஒதுக்கியதில் 13.62 கோடி செலவழித்துள்ளது. தமிழகத்திற்கு 190.68 கோடி ஒதுக்கியதில் ரூ.6 கோடி மட்டுமே செலவழித்துள்ளது. மகாராஷ்டிராவிற்கு 149 கோடி ஒதுக்கியதில் ஒரு ரூபாய் கூட செலவழிக்கவில்லை. ஒவ்வொரு மாநில அரசும் நிர்பயா நிதியை இப்படித்தான் செலவழித்துள்ளது. பெண்கள் பாதுகாப்பில் மாநில அரசுகள் காட்டும் லட்சணம் இதுதான். இந்திய அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் தான் மிகவும் குறைவு. மகிழ்ச்சிதான். ஆனால் 2016ல் 533 வழக்குகள் பதிவான நிலையில் 2017ல் 642 வழக்குகள் பதிவாகி இருப்பதும், பெண் குற்றங்களுக்கு எதிரான உதவி எண் 181ல் இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்திருப்பதும் தமிழகமும் பெண்கள் பாதுகாப்பில் ஆபத்தான நிலையை நோக்கி செல்வதை உணர்த்துகிறது. ஆனால் நிர்பயா திட்டத்தின் கீழ் 2013 முதல் 2018 வரை எந்த ஒரு பரிந்துரையையும் தமிழக அரசு வழங்கவில்லை என்பது உச்சகட்ட அலட்சியம். இந்த ஆண்டுதான் 300 கோடி மதிப்பில் 13 பரிந்துரைகளை மத்திய அரசிடம் தமிழக அரசு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது. பெண்கள் பாதுகாப்பிற்கு 2016ல் அனைத்து மாநிலங்களும் உதவி எண் அறிவித்தபின், கடைசியாக இரண்டு வருடம் கழித்து, அதுவும் சிஏஜி அறிக்கையில் திட்டித்தீர்த்தபிறகு ஆளும் அதிமுக அரசு விழித்துக்கொண்டது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?. இப்போது கூட பெண்கள் பாதுகாப்புக்கு இளம்சிவப்பு நிறத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அம்மா ரோந்து வாகனமும் மத்திய அரசு நிதிதான். பெண்களின் ஆபாச படம், வீடியோ பரவுவதை தடுக்க 7 கோடியில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சைபர் ஆய்வகம் அமைக்க பரிந்துரைத்திருக்கிறார்கள். பெண்கள் பாதுகாப்பு திட்டம் இப்போதுதான் தமிழகத்தில் வேகம் எடுக்கிறது. சென்னையை மட்டும் கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் அதிக பாலியல் சம்பவங்கள் நடைபெறும் மாவட்டங்களிலும் கூடுதல் கவனத்தை போலீசார் மேற்கொள்ள வேண்டும், இதில் அலட்சியம் கூடாது,
- ஆசிரியர்
- T.R.ராஜமோகன்
- தேசிய மக்களாட்சி
No comments:
Post a Comment